Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-02

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-02

எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை)

சென்ற இதழில் ஒரு மனிதரை தரைக் குறைவாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்தும் அளவிற்கு இழிவாக பேசக் கூடாது. மேலும் பிறர் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும், ஈமான் கொண்ட மக்களுக்கு மத்தியில் மானக் கேடான விடயங்கள் பரவ வேண்டும் என்று பிரியப்படக் கூடாது, பிறர் குறைகளை துருவி, துருவி ஆராயக் கூடாது போன்ற செய்திகளை குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து எடுத்துக் காட்டி பிறரை இழிவாக பேசாதீர்கள், பிறரை மானபங்கப்படுத்தாதீர்கள் என்று கூறும் போது, பிறரை தாராளமாக மானபங்கப்படுத்திப் பேசலாம், குறைகளை சுட்டிக் காட்டி பேசலாம் என்று பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டி, நபியவர்களே பிறருக்கு மத்தியில் வைத்து மானபங்கப்படுத்தியுள்ளார்கள் என்றால் நாம் ஏன் பிறரை மானபங்கப்படுத்தக் கூடாது? என்று இவர்கள் கேட்கிறார்கள்?

முதலாவது வழமைப் போன்று இவர்கள் ஹதீஸை தவறாகப் புரிந்து கொண்டார்கள்.

இவர்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸில் பிறரை குறை பேசவோ, அல்லது மானபங்கப்படுத்தவோ எந்த வழியையும் நபியவர்கள் காட்டித் தரவில்லை.
மக்களை பக்குவப்படுத்த வந்த நபியவர்கள் மக்களுடன் இப்படி தவறாக நடந்துகொள்ளச் சொல்வார்களா?

இவர்கள் தவறாக ஹதீஸ்களை விளங்கிக் கொள்வதினால்தான் பயப்படாமல் ஸஹாபாக்களையும் குறை சொல்லி, குத்திக்காட்டி பேசுகிறார்கள். அந்த செய்திகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் வரும். இவர்கள் தங்களுக்கு சாதகமாக முன்வைக்கும் ஹதீஸ்களை முதலில் அவதானியுங்கள்.

அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் உத்பிய்யா எனப்படும் ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்த போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், “இது உங்களுக்குரிய செல்வம். இது (எனக்கு வந்த) அன்பளிப்பு” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உண்மையாளராக இருந்தால், உம்முடைய தந்தை வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்” என்று கூறினார்கள்.

பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்கினேன். அவர் (சென்றுவிட்டு) வந்து, “இது உங்களுக்குரிய செல்வம். இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று சொல்கிறார். அவர் சொல்வது உண்மையாயிருந்தால், அவர் தம் தந்தை வீட்டிலோ அல்லது தாய் வீட்டிலோ உட்கார்ந்திருக்கலாமே! அன்பளிப்புகள் வருகின்றனவா என்று பார்ப்போம்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்துகொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக்கொண்டிக்கும் மாட்டையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்துகொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்” என்று கூறினார்கள்.

பிறகு, தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, “இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா” என்று அவர்கள் கூறியதை என் கண் கண்டது காது கேட்டது. (முஸ்லிம் 3740)

இந்த ஹதீஸில் ஸகாத்தை வசூலித்து விட்டு வந்த தோழரை மையப்படுத்தி ஓர் உபதேசம் செய்கிறார்கள். அதில் குறிப்பாக பொறுப்புகள் கொடுக்கப்பட்டு. அதை யார் தவறாக பயன் படுத்தி, மோசடி செய்கிறார்களோ அவர்களை எச்சரிக்கும் விதமாக தான் நபியவர்கள் அங்கு உரை நிகழ்த்தினார்களே தவிர, அவரை மானபங்கப்படுத்துவதற்காக அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் யாரையாவது மானபங்கப்படுத்துவார்களா ? இவர்கள் தவறாக நடந்து கொள்வதற்கு, நபியவர்களையும் துணைக்கு இழுக்கிறார்கள். அப்ப தான் மக்களிடம் சாட்டு, போக்கு சொல்லி தப்பிக்கலாம்.

இவர்களுயை அணுகுமுறை எப்படி பிழையானது என்பதை முதலில் அவதானியுங்கள். குர்ஆனுக்கு முரண் பட்டால் ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும், அந்த ஹதீஸை நிராகரிக்க வேண்டும் என்பது இவர்களின் அடிப்படை கொள்கையாகும். அதன்படி பார்த்தால் நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களுக்கு இந்த ஹதீஸ் முரணாகவே உள்ளது.

பிறருடைய குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள். மற்றும் மானக் கேடான விடயத்தை பரப்பாதீர்கள். (49: 12) (24:19) (33:58) போன்ற வசனங்களுக்கு முரணாக உள்ளதால் இவர்களின் வாதப்படியே இந்த ஹதீஸ் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அது மட்டுமல்ல முதல் பகுதியில் சுட்டிக் காட்டிய அனைத்து ஹதீஸ்களும் பிறர் குறையை மறைக்க வேண்டும், பிறரை இழிவுபடுத்தக் கூடாது, பிறரை மானபங்கப்படுத்தக் கூடாது. போன்ற அனைத்து ஹதீஸ்களும் இவர்கள் (பிழையாக) ஆதாரம் காட்டும் ஹதீஸிற்கு முரணாக உள்ளது. அப்படி பார்த்தாலும் அந்த ஹதீஸ் இவர்களின் வாதப்படி ஒதுக்கப்பட வேண்டியதே! அந்த ஹதீஸை வைத்து இவர்கள் பேச முடியாது.

(அந்த ஹதீஸ் குர்ஆனுக்கோ, ஸஹீஹான ஹதீஸிற்கோ முரணில்லை என்பதை இன்ஷா அல்லாஹ் இறுதியில் அதை நான் விளங்கப்படுத்த உள்ளேன்.) இவர்களுக்கு சாதகமாக இருந்தால் உடனே இது குர்ஆனுக்கு முரண் என்று சொல்லி கண்ணை மூடிக்கொண்டு தட்டிவிடுவார்கள். ஆனால் பாதகமாக இருந்தால் தெரியாதது போல இருந்து விடுவார்கள்.

நபியவர்கள் பிறரை ஏசினார்கள் அதனால் நாங்களும், பிறரை ஏசுவோம். ஏசலாம் என்கிறார்கள். ஆனால் நபியவர்கள் ஒரு மனிதரை சபித்தாலோ, அல்லது ஏசினாலோ அது சம்பந்தப் பட்டவருக்கு நன்மையாக அமைந்து விடும். நீங்கள் ஒரு மனிதரை சபித்தாலோ, அல்லது ஏசினாலோ அது உங்களுக்கே பாவமாக மாறிவிடும். எந்த அடிப்படையில் அந்த ஹதீஸை ஆதாரமாக எடுக்கிறீர்கள்? இதெல்லாம் ஹதீஸை அணுக தெரியாததினால் வந்த வினையாகும். அது சம்பந்தமான ஹதீஸை கவனியுங்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுக்கிறேன். அதற்கு நீ மாறு செய்யமாட்டாய். (அது) நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) மனவேதனைப் படுத்தியிருந்தால், ஏசியிருந்தால், சபித் திருந்தால், அடித்திருந்தால், அதையே அவருக்கு அருளாகவும் பாவப் பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!” என்று கூறினார்கள். (முஸ்லிம் 5068)

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் வந்தார்கள்; நபியவர்களிடம் எதைப் பற்றியோ பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் சபித்து ஏசிவிட்டார்கள்.

அவர்கள் இருவரும் சென்றதும், நான், “அல்லாஹ்வின் தூதரே! நன்மைகளில் எதையேனும் யார் அடைந்துகொண்டாலும், இவ்விருவர் (மட்டும்) அதை அடையப்போவதில்லை” என்று கூறினேன். அதற்கு “அது எதனால்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். நான், “அவ்விருவரையும் தாங்கள் சபித்தீர்களே ஏசினீர்களே” என்று பதிலளித்தேன்.  அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் என் இறைவனிடம் நிபந்தனையிட்டுக் கூறியுள்ளதை நீ அறியவில்லையா?

“இறைவா! நான் ஒரு மனிதனே! நான் முஸ்லிம்களில் ஒருவரைச் சபித்திருந்தால், அல்லது ஏசியிருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் நன்மை யாகவும் ஆக்கிவிடுவாயாக” என்று கூறியுள்ளேன்” என்றார்கள். (முஸ்லிம் 5066)

இப்படி பல ஹதீஸ்களை நாம் காணலாம். எனவே இந்த ஹதீஸ்களின் படியும் பிறரை ஏசலாம், மானபங்கப்படுத்தலாம் என்ற இவர்கள் காட்டும் ஹதீஸின் வாதம் அடிப்பட்டு போய்விடுகிறது.

எனவே பொது மக்களாகிய நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள், பிற மனிதர்களை ஏச முடியுமா? குறை பேச முடியுமா? மானபங்கப்படுத்த முடியுமா? ஆனால் இவர்கள் பகிரங்கமாக இதை செய்கிறார்கள் என்றால், இவர்கள் மார்க்கத்தின் பெயரால் தவறாக வழி நடாத்தப் படுகிறார்கள் என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது.

தவறாக பேசும் இவர்களிடம் எப்படி நல்ல பண்புகளை மார்க்கமாக படிக்க முடியும்? பானையில் உள்ளது தானே அகப்பையில் வரும், உள்ளத்தில் தவறான சிந்தனைகள் நிறைந்தவர்களிடம் தவறான பேச்சுகளும், நடவடிக்கைகளும்தான் வெளிவரும். மனிதன் என்ற அடிப்படையில் ஸஹாபாக்களிடத்தில் வார்த்தை ரீதியாகவோ, நடிவடிக்கை ரிதியாகவோ சில தவறுகள் நடக்கும் போது, அது தவறு என்று அல்லாஹ் அதை திருத்திக் கொடுக்கிறான். அதை ஸஹாபாக்களும் ஏற்று திருத்திக் கொள்கிறார்கள். அப்படியான சம்பவங்களை ஒரு நிகழ்வாகத்தான் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு, நபியவர்கள் பேசியுள்ளார்கள் தானே, ஸஹாபாக்கள் பேசியுள்ளார்கள் தானே, என்று நாம் தவறு செய்துவிடக் கூடாது. அல்லாஹ் அவர்களின் தவறுகளை திருத்திக் கொடுத்து, மன்னித்து விட்டான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் இவர்கள் ஸஹாபாக்களை எப்படியெல்லாம் அருவருப்பாக பேசி கொச்சைப் படுத்தியுள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டுவதோடு, இப்படி பேச முடியுமா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்ட உள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *