Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 05)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 05)

Magic Series – Episode 05:

சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்:

வாதம் 4:
செய்யாத ஒன்றைத் தாம் செய்ததாக ஒருவர் நினைப்பது பைத்தியமா?

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்கள், தமது வாதங்களை நியாயப்படுத்த என்னென்ன பித்தலாட்டங்களையெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். இந்த அடிப்படியில் ஹதீஸ் மறுப்பாளர்கள் முன்வைக்கும் இன்னொரு வாதத்தையும் இப்போது பார்க்கலாம்.

ஹதீஸ் மறுப்பாளர்கள் முன்வைக்கும் வாதம் இது தான்:
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தியில், சூனியத்தின் தாக்கத்தால், நபி (ஸல்) அவர்களது சுய நினைவு பாதிக்கப் பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, சூனியத்தின் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றைத் தாம் செய்ததாக நினைத்துக் கொண்டேயிருந்தார்கள் என்று ஹதீஸ் வாசகம் கூறுகிறது.

ஒருவர் செய்யாத ஒன்றைத் தான் செய்ததாக நினைப்பது என்பது பைத்தியம் எனும் நோயின் ஒரு வகை தான். ஆகவே, இந்த ஹதீஸ் வாசகம், நபி (ஸல்) அவர்கள் பைத்தியமாக இருந்தார்கள் என்று கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் பைத்தியமாகவே முடியாது என்பதை குர்ஆன் பல இடங்களில் ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறது. இந்த வசனங்களுக்கெல்லாம் இந்த ஹதீஸ் முரண்படுகிறது.

மேலும், நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் கொஞ்ச நேரமாவது சுய நினைவை இழந்து, பைத்தியமாக இருந்தார்கள் என்ற ஒரு கருத்தை ஏற்றுக் கொண்டால், அடுத்த நிமிடமே வஹியின் தூய்மை, பாதுகாப்பு அனைத்தும் கேள்விக்குறியாகி விடும். அல்லாஹ் இந்த வஹியைப் பாதுகாப்பதாக குர்ஆனில் உத்தரவாதமளித்திருக்கிறான். இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால், இந்த உத்தரவாதமே கேள்விக்குறியாகி விடும். எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள முடியாது.

இது தான் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதங்களது சாராம்சம். இனி இதற்கான பதிலைக் கொஞ்சம் விரிவாக நோக்கலாம்:

கேட்பதற்கு அழகான ஒரு வாதம் தான் இது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த வாதத்தில் எவ்வளவு உண்மையும், நியாயமும் இருக்கிறது என்பதைக் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், இதிலிருக்கும் அபத்தம் புரிந்து விடும்.

உண்மையில் இந்த வாதம் கூட ஒருவகையில் ஹதீஸ் மறுப்பாளர்களுக்கே எதிரான வாதம் தான். அது எப்படியென்பதைப் புரிந்து கொள்வதற்கு நாம் முதலில் மூஸா (அலை) அவர்களது சம்பவத்தையும் பார்க்க வேண்டும்.

மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவுனின் சபையில் சூனியக்காரர்களோடு போட்டியிட்ட போது, சூனியக்காரர்கள் செய்த சூனியத்தால், அவர்கள் போட்ட கைத்தடிகளும், கயிறுகளும் நெளிவது போலவும், சீறுவது போலவும் தோற்றமளித்தன என்பதைக் குர்ஆன் தெளிவாகவே கூறுகிறது. உதாரணத்துக்குப் பின்வரும் வசனங்களைப் பாருங்கள்:

“இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.
மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். (20 : 66,67)

“நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் போட்ட போது மக்களின் கண்களுக்கு சூனியம் செய்து, மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (7:116)

இந்த வசனங்களில், சூனியக்காரர்கள் மூஸா (அலை) உட்பட அனைவரது கண்களுக்கும் சூனியம் செய்தனர் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும், அவர்களது சூனியத்தின் விளைவாக இல்லாத ஒரு பிரமைத் தோற்றம், கண் எதிரில் இருப்பதாக மூஸா (அலை) அவர்களும், பார்வையாளர்களும் நம்பினார்கள் என்றும் இந்த வசனங்கள் கூறுகின்றன. மேலும், மூஸா (அலை) அவர்கள் கூட பயந்து போகும் அளவுக்கு அந்தப் பிரமை, யதார்த்தம் போலவே இருந்தது என்றும் இந்த வசனங்கள் மிகவும் தெளிவாகக் கூறுகின்றன.

அதாவது, தமது கண்ணெதிரில் இல்லாத ஒரு விசயத்தை இருப்பதாக மூஸா (அலை) அவர்கள் நினைத்தார்கள். அவ்வாறு நினைத்ததன் விளைவாக, அவர்கள் பயப்படவும் செய்தார்கள்.

சுருக்கமாக சொல்வதென்றால், இங்கு சூனியத்தின் மூலம் மூஸா (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது ஒரு பிரமை. இதைத் தான் மிகவும் தெளிவாக இந்தக் குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆக, மூஸா (அலை) அவர்கள் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைக்கும் அளவுக்கு சூனியத்தின் மூலம் அவர்களுக்கு ஒரு பிரமை ஏற்படுத்தப் பட்டது என்பது இங்கு மறுக்க முடியாதவாறு நிரூபணமாகி விட்டது.

இனி இதை மனதில் வைத்துக் கொண்டு, நபியவர்களுக்கு செய்யப்பட்ட சூனியத்தைப் பார்ப்போம்:

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் ஏற்பட்ட தாக்கம் என்ன?

தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் பிரமை ஏற்பட்டது.

அதாவது, தனது துணைவியருடன் உடலுறவு கொள்ளாமலே, உடலுறவு கொண்டதாக நபி (ஸல்) அவர்கள் நினைத்தார்கள்.

சுருக்கமாக சொல்வதென்றால், சூனியத்தின் மூலம் இங்கு நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டதும், மூஸா (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது போன்ற ஒரு பிரமை தான்.

ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதப்படி…..
செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைத்த நபி (ஸல்) அவர்களின் பிரமை பைத்தியம் என்றால், இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்த மூஸா (அலை) அவர்களின் பிரமையும் பைத்தியம் தான்.

இப்போது ஹதீஸ் மறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும்; மூஸா (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது பைத்தியமா?

பைத்தியம் என்றால், இவர்கள் வாதப்படி பைத்தியம் பிடித்திருந்த அந்தக் குறுகிய நேரப்பகுதிக்குள்ளேயே மூஸா (அலை) அவர்களுக்கு “அஞ்சாதீர்; நீர் தான் வெல்பவர். உமது கையில் இருப்பதைப் போடுவீராக” என்ற வஹிச் செய்தி வந்ததே…. அந்த வஹிச் செய்தியும் இப்போது கேள்விக்குறியாகி விட்டதா?

அப்படியானால், அந்த வஹியைக் குறிக்கும் குர்ஆன் வசனத்தின் பகுதியையும் குர்ஆனிலிருந்து அப்புறப்படுத்தி விடலாமா?

இந்தக் கேள்விக்கு ஹதீஸ் மறுப்பாளர்கள் என்ன விளக்கம் தரப் போகிறார்களோ, அதே விளக்கம் தான் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்த சம்பவத்துக்கும் பொருந்தும் என்பதை அவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ளட்டும்.

மேலும், ஹதீஸ் மறுப்பாளர்கள் அவதூறு கூறுவதைப் போல், சூனியத்தின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பிரமையுணர்வு என்பது, சுயநினைவை இழந்து பைத்தியமாகும் அளவுக்கு ஒருபோதும் இருக்கவில்லை என்பதை அந்த ஹதீஸ் வாசகங்களே தெளிவாக விளக்குகின்றன.

செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைத்த அந்த நினைப்பு எது விசயத்தில் மட்டும் ஏற்பட்ட நினைப்பு என்பதையும் அதே ஹதீஸின் பல்வேறு அறிவிப்புகளில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.

தனது மனைவியரிடத்தில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதில் இடைஞ்சல் செய்யும் விதமாக மட்டுமே அந்த சூனியத்தின் பாதிப்பு நபி (ஸல்) அவர்கள் விசயத்தில் இருந்தது என்று ஹதீஸ் தெளிவாகச் சொல்லும் போது, இதற்கு முற்றிலும் மாற்றமாக மனோ இச்சையின் அடிப்படையில் கற்பனை வாதங்களை அடுக்கி அடுக்கி, இல்லாத அவதூறுகளை நபி (ஸல்) அவர்களது பொன்மொழிகள் மீது இவர்கள் வாறி வீசுகிறார்களே…. அல்லாஹ்வின் சாபம் இறங்கக் கூடிய ஒரு பாவச் செயலைச் செய்து கொண்டிருக்கிறார்களே…

இந்த உண்மையை, இவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் மக்கள் எப்போது தான் உணரப் போகிறார்கள்?

மேலும், நபி (ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நிலையில் கூட சுயநினைவை இழக்கவில்லையென்பதற்கு இந்த ஹதீஸே ஒரு பெரிய ஆதாரமாக இருக்கிறது.

ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியின் ஒரு பகுதியில், சூனியத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நபி (ஸல்) அவர்களுக்கு வஹி வந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, இரண்டு வானவர்கள் இறங்கி, நபி (ஸல்) அவர்கள் அருகில் நின்று தமக்குள் பேசிக்கொண்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. வானவர்களின் இந்த சம்பாஷனையில், நபி (ஸல்) அவர்களைப் பீடித்திருக்கும் நோய் சூனியத்தின் மூலம் தான் ஏற்பட்டது என்ற தகவலும், அதைச் செய்தது யார் என்ற தகவலும், எந்த இடத்தில் சூனியம் எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலும் விபரமாக சொல்லப்படுகிறது.

வானவர்கள் பேசிக் கொண்ட இந்தத் தகவல்கள் மொத்தமும், அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பிய வஹிச் செய்திகள். நபி (ஸல்) அவர்கள் தெளிவான சுயநினைவோடு இருந்ததால் தான் இந்த வஹியைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தத் துல்லியமான தகவல்களை வைத்துத் தான், நபியவர்கள் தர்வான் எனும் கிணற்றுக்குச் சென்று, அதனுள் இருந்த சூனியத்தை வெளியில் எடுக்க வைத்துப் பார்த்து விட்டு, அதே கிணற்றுக்குள் அதை மீண்டும் போட்டுக் கிணற்றையும் மூடி விடச் செய்தார்கள்.

ஹதீஸ் மறுப்பாளர்கள் சொல்வது போல், நபிக்கு வந்த பிரமை பைத்தியமாக இருந்திருந்தால், வானவர்கள் மூலம் வஹியில் சொல்லப்பட்ட தகவல்களுக்கு முரணாக, ஏறுக்கு மாறாக ஏதேதோ செய்திருப்பார்கள். வஹியில் என்னவெல்லாம் சொல்லப்பட்டதோ, அதுவெல்லாம் அச்சுப் பிசகாமல் நேரில் சென்று பார்த்த போது இருந்ததாக ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பிரமை, சுயநினைவை இழக்கச் செய்ததாக இருந்திருந்தால், இவ்வளவு கச்சிதமாக வஹியின் செய்திகளை நபி (ஸல்) அவர்கள் கிரகித்திருக்கவே மாட்டார்கள். ஆகவே, நபிக்கு வந்த பிரமை பைத்தியம் அல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் வாசகங்களே ஓர் ஆதாரம்.

மேலும், இது போன்ற சதித் திட்டங்களால் வஹியின் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படவில்லையென்பதைக் குர்ஆன் கூட பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது:

(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது. (75 : 16-19)

ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால், அல்லது அதை மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? (2 : 106)

உண்மையில் நபி (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் செய்தது, விஷத்தை உண்ணக் கொடுத்தது போன்ற எந்த சதித் திட்டத்தாலும், நபி (ஸல்) அவர்களது பணிகளுக்கும், இறைச் செய்திகளுக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்பதற்கு மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள் கூட ஆதாரம் தான். இதையெல்லாம் ஹதீஸ் மறுப்பாளர்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா? அல்லது புரிந்தும், புரியாதது மாதிரி நடிக்கப் போகிறார்களா என்பதை அல்லாஹ்வே அறிவான்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

திருத்தம்…!!
—————-

இது எனது கட்டுரையிலிருந்து ஒரு சகோதரர் எனக்குச் சுட்டிக் காட்டிய ஒரு பகுதி. இந்த இடத்தில் எனது வாதத்தில் ஒரு கோளாறு இருப்பதை அந்த சகோதரர் எனக்கு உணர்த்தினார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

உண்மையில் இந்த இடத்தில் நான் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தியை, மூஸா (அலை) அவர்களது போட்டியோடு ஒப்பிடும் போது, அந்த ஒப்பீட்டுக்குப் பின்னால் இருக்கும் தர்க்க ரீதியான நியாயத்தை சரியாகத் தெளிவு படுத்தத் தவறியிருக்கிறேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இந்த இரண்டு சம்பவங்கள் மூலமும் நான் உணர்த்த விரும்பிய உள்ளார்ந்த கருத்து இது தான்:

சூனியத்தின் மூலம் பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் மாற்றி சித்தரித்து, அதை நம்ப வைக்கலாம். இந்த அடிப்படையில் தான் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் சம்பந்தம் கற்பித்திருக்கிறேன்.

அதாவது, மூஸா நபி விடயத்தில் இல்லாத ஒரு பொய்யை இருப்பதாக அவர் நம்பும் அளவுக்கு அவரது பார்வைப் புலன் மூலமாக அவரது சிந்தனை ஏமாற்றப் பட்டது. இதே போல் நபி (ஸல்) விடயத்தில் தாம் செய்யாத ஒரு செயலை (ஒரு பொய்யை) உண்மையில் செய்தது போல் அவர்கள் நம்பும் அளவுக்கு நபியவர்களது சிந்தனையும் ஏமாற்றப் பட்டது. இது தான் அடிப்படை.

நம்ப வைத்த விதத்தில் மட்டுமே வேறுபாடு இருக்கிறது. மூஸா (அலை) அவர்கள் விடயத்தில் கண்ணெதிரில் நேரடியாக ஒரு பொய் நம்ப வைக்கப் பட்டது. நபி (ஸல்) விடயத்தில் மறைமுகமாக ஒரு பொய் நம்ப வைக்கப் பட்டது. எப்படிப் பார்த்தாலும், இந்த இரண்டு நபி மார்களதும் சிந்தனை சூனியத்தால் ஏமாற்றப்பட்டது என்பது தான் அடிப்படை உண்மை. இந்த அடிப்படை உண்மையை வைத்துத் தான் நான் இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டிருக்கிறேன்.

நான் செய்த தவறு என்னவென்றால், இந்த ஒப்பீட்டுக்குப் பின்னால் இருக்கும் அடிப்படை உண்மையை சரியாக விளக்கத் தவறி விட்டேன்.

சுட்டிக் காட்டியமைக்கு ஜஸாகல்லாஹ்.

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *