Featured Posts
Home » நூல்கள் » நூல் விமர்சனம் » நூல் அறிமுகம் – ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் (1)

நூல் அறிமுகம் – ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் (1)

நூல் அறிமுகம் by M.H.Abdullah

ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம்
P.ஜைனுல் ஆபிதீன்
ஏகத்துவ புத்துயிர்ப்பும் ஹதீஸ் மறுப்பும்

இந்த நூல் 2020 ஜனவரி முதலாம் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்கள் இந்த நூலை விமர்சன ரீதியாக எழுதியுள்ளார். P.ஜைனுல் ஆபிதீன் என்பவர் கடந்த காலங்களில் ஏகத்துவக் கொள்கைக்கு புத்துயிர்ப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார். தற்போது அவரின் நிலை அனைவரும் அறிந்ததே! நூலாசிரியர் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடும் போது, P.ஜைனுல் ஆபிதீன் நன்றியுடன் நினைவு கூறத்தக்க, நிர்மாணத் திறன்மிக்க நிறையப் பணிகளை ஆற்றியுள்ளார். அண்மைக்காலம் வரை, அவர் ஆன்மிக வழி நெறியில் கட்டமைக்கப்பட்ட ஜனரஞ்சகமான ஓர் இயக்கத்தில் உச்ச அதிகாரமுடையவராகத் திகழ்ந்தார். அவரது புகழும் செல்வாக்கும் உயர்வாக இருந்த அவரது இயக்கத்திலிருந்தே நீக்கப்பட்டார் என்பதுதான் துயரமானது.

எனினும், அவர் குறிப்பிடத்தக்க பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார். அதனால், அவர் நீண்டகாலமாக மதிக்கப்பட்டு வந்தார். குறுகிய காலத்தில் வரவேற்கத்தக்க முற்போக்கான, பல துறை சார்ந்த சேவைகளையாற்றி, பிற இன மக்களாலும் ஓர் இஸ்லாமிய ஆளுமையாக நோக்கப்பட்ட அவர், பயணித்து வந்த பாதையில் திசை மாறிப் போனமை, தஃவாக் களத்திற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்குத் தெளிவை வழங்கியதோடு, அது ஓர் அசைவியக்கத் தன்மை கொண்ட மார்க்கம் என்பதை நிரூபிக்கும் நியாயங்களை வழங்கி, பலரை இஸ்லாமிய முகாமிற்குள் ஐக்கியப்படுத்தியதிலும் காலத்திற்கு ஏற்றவாறு, எளிமையான எழுத்தாலும் உயிரோட்டமான உரைகளாலும் இஸ்லாத்தைப் புரிய வைத்ததிலும் அவரது வகிபாகம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஏகத்துவ புத்துயிர்ப்பிலும் இஸ்லாமியக் கோட்பாடுகளைப் புரியவைத்ததிலும் பல நவீன பிரச்சினைகளுக்குத் தீர்வு சொன்னதிலும் அவருக்கு பெரிய பங்குள்ளது போலவே, பல சலசலப்புக்களையும் குழு மோதல்களையும் அவரது நிலைப்பாடு தோற்றுவித்தது. சில விவகாரங்களில் இஸ்லாமிய விழுமியங்களை மீறிய கடும்போக்கையும்; இயக்க வாதத்தையும் அவர் கடுமையாகக் கடைப்பிடித்து, தஃவாக் களத்தை ஒரு கொதி நிலைக்குள் தள்ளி, அதை தனக்குச் சாதகமாக நகர்த்திச் செல்ல முயற்சித்தமை, அவரது மதிப்பை கீழ் நிலைக்குத் தள்ளியது. அண்மைக் காலங்களில் அவர் மீது தொடுக்கப்பட்ட ஆபாச ஆடியோ சர்ச்சை அவரது மதிப்பை மேலும் தகர்த்துவிட்டது.

தொடர் தேர்ச்சியான சமூகவியல் மாற்றங்கள் நிகழ்த்தப்பட வேண்டுமாயின் பன்முகத் தன்மை நிறைந்த ஆளுமையும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த நாகரிகப் பண்புகளும் ஆன்மிக செழுமையும் வேண்டும் என்ற பாடத்தை அவரது வரலாறு ஊன்றிப் பதிவு செய்துள்ளதால், தாயிகளுக்கு அவரது வாழ்வில் பல படிப்பினைகள் உண்டு. நீண்டகால கடுமையான உழைப்பால் அவர் கட்டி எழுப்பிய நன்மதிப்பையும் மரியாதையையும் சமூக அந்தஸ்தையும் இன்று பெருமளவு இழந்து நிற்கின்றார். இவ்வளவு பணிகளைச் செய்த ஒரு மனிதன் இந்த நிலைக்கு ஆளாகக் கூடாது. இவருக்கு ஏற்பட்ட இழிவும் அவமானமும் இனி யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பிரார்த்தனை செய்கின்றேன்.

P.ஜைனுல் ஆதீன் பற்றி விமர்சன ரீதியாக அணுகியுள்ள இந்த நூலை நிதானமாக வாசித்து, அவரது கடந்த கால – நிகழ்கால செல்நெறியை நன்கு புரிந்து, ஒரு தாயி எப்படி இருக்கவேண்டும்? எப்படி இருக்கக் கூடாது என்பதைப் பரிந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்” என்று குறிப்பிடுகின்றார்.

நூலின் பின்னுரையில் அவர் குறிப்பிடும்போது, “இஸ்லாமிய அறிஞர்களில் யாரும் இவர் போன்று இயக்கம் சார்ந்து நிற்கவில்லை. ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னுத் தைமிய்யா (ரஹ்), முஹமமத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்), முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்), அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்), போன்ற நல்லறிஞர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவர்கள் கூட்டம் சேர்த்து, கட்சியரசியல் நடாத்தி, ஆதரவு நிலையோ எதிர்ப்பு அரசியலோ செய்யவில்லை. அவர்களது இயக்கம் இஸ்லாமாகவே இருந்தது. அவர்கள் அறிவுப் பணிக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்து தஃவா, ஆய்வுத் துறைகளில் மிகப்பெரும் பங்கை ஆற்றி, வரலாற்றில் மறவாத பதிவுகளை ஏற்படுத்தினார்கள்.

ஜாக் என்ற அமைப்பில் சாதாரண உறுப்பினராக இருக்கும் போது, அவரிடம் காணப்பட்ட பல நல்ல பண்புகள், TNTJ வின் தலைவராக மாறியவுடன் குறைவடைந்ததை அவதானிக்க முடிந்தது. த.மு.மு.க. அமைப்பாளராக அவர் இருந்த போது, தனது கொள்கைக்கு எதிர் முகாம்களில் இருந்த அனைத்து மக்களையும் நேசித்து, அவர்களின் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பினார். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை ஆரம்பித்து, ஓரளவு மக்கள் கூட்டத்தைக் கண்ட பின்னர், அவரது சிந்தனையிலும் நடத்தையிலும் மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தது. ஆணவமும் அறிவு மமதையும் அவரது பேச்சிலும் எழுத்திலும் நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டன.

அவர் அங்கத்துவம் பெற்றிருந்த முன்னைய பல இயக்கங்களிலிருந்து நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, நீக்கப்பட்டு, நடு வீதியில் அவர் விடப்பட்டபோது, அவருக்கு உதவி செய்தோருக்கு நன்றி சொல்லும் நல்ல மனப்பான்மையிலிருந்து அவர் விலகி, தனக்கு விசுவாகமாக இருந்த பலரை சந்தேகக் கண்கொண்டு நோக்கினார். முக்கிய சிலரை தனக்கு எதிராகவோ, நிகராகவோ வந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்தார். அதனால், அவர்களை திட்டமிட்டு ஓரம் கட்டினார். திறமையானவர்களையும் நல்ல ஆலோசனை வழங்கியவர்களையும் விட்டு அவர் தூரமாகினார். ஆளுமையற்றவர்களை தன்னருகே அதிகளவில் வைத்துக் கொண்டார். அவர்களை வைத்தே தனது அதிகாரத்தை தனது இயக்கத்திற்குள் வடிவமைத்துப் பலப்படுத்தினார். அவர்களின் முதிர்ச்சியற்ற போக்குகளுக்கு இவர் பல சந்தர்ப்பங்களில் இயைந்து போனார். அவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்றாற் போல் பேசவும் எழுதவும் விவாதிக்கவும் ஆரம்பித்தார். கருத்தை கருத்தால் வெல்வதைவிடுத்து, கள்ள வெப்சைடுகள் மூலம் எதிர் கருத்திலுள்ளோரை தாக்கினார். அவர்களின் விமர்சினங்களுக்குப் பதில் அளிப்பதைவிட, அவர்களின் தனிப்பட்ட விவகாரங்களை மிகையூட்டி அம்பலப்படுத்தினார். இவை, அவரது புதிய போக்கின் பலவீனத்தையே வெளிப்படுத்தியது. தனது கோட்பாடு சரியாக இருந்தால், அதை நேரடியாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். அதுவே சத்தியத்தின் அடையாளமாகக் கொள்ளப்பட்டுவருகிறது. மாற்றுக் கருத்துள்ளோரின் மானத்தோடு விளையாடும் மாபாதச் செயலை இவருக்கு முன்னர் எந்த அறிஞனும் செய்யவில்லை. அவரது தவறான வழி இறுதியில் அவருக்கே ஆபத்தாக அமைந்துவிட்டது.

‘மாற்றம் செய்! நீ பிரபலமாவாய்!’ என்ற கோட்பாட்டை வரித்துக் கொண்டு, 1400 ஆண்டு கால இஸ்லாமிய கொள்கை மரபிற்கு மாற்றமாக, இது வரை எந்த நல்லறிஞரும் முன்வைக்காத சர்ச்சைக்குரிய சில புதிய கருத்துக்களை முன்வைத்தார். தனிப்பட்ட, இயக்க நலனிற்காக அவர் ஏற்படுத்திக் கொண்ட கருத்தியலை அனைவரும் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஏற்காத அனைத்து முஸ்லிம்களையும் காபிர் என்றும், தான் மட்டுமே பரிசுத்தமான கொள்கைவாதி என்றும் நிறுவ முனைந்தார். அவரும் சேர்ந்து கட்டமைத்து இயக்கிய அனைத்து இயக்கங்களிலிருந்தும் அவர் துரத்தப்பட்டார். எனினும், நானாகத்தான் விலகினேன். நானே சரியானவன் என்னைப் புறக்கணித்த அனைவரும் தவறானவர்கள் என்று பிரசாரம் செய்தார். இதற்காக தனது பெரும் சக்தியையும் வளத்தையும் செலவிட்டார்.

ஒவ்வொரு இயக்கத்துடன் முரண்பட்ட போதும் புதிய இயக்கம் கண்டார். தன்னிடமிருந்து பிரிந்து சென்ற யாரும் வேறு இயக்கம் அமைக்கவிடாமல் தடுக்க எல்லா சதி முயற்சிகளையும் நேரடியாகவும் திரைமறைவிலும் மேற்கொண்டார். முரண்பட்ட ஒவ்வொருவர் மீதும் ஏதாவது குற்றத்தை சுமத்தினார். தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கு ஏற்றாற்போல், இறுதியில் ஆபாச பச்சை ஆடியோ சர்ச்சைக்குள் வசமாக சிக்கிக் கொண்டார். அதனால், தான் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த இயக்கத்திலிருந்தே தூக்கி எறியப்பட்டார். அவர், அருகாமையில் வைத்திருந்தவர்கள், அவர் உருவாக்கிய மாணவர்கள், முக்கிய நிர்வாகிகள் என்று யாரும் அவர் பின்னே செல்லவில்லை. அந்தளவுக்கு அவரது செல்வாக்கை அவரது ஆபாச அடியோ சரியச் செய்துவிட்டது. …அவரது சேவைகளை முதல் பாகத்தில் ஓரளவு மதிப்பீடு செய்துள்ளதோடு, இன்னும் பல அவரது விரிந்த பணிகளையும் அவர் மீதுள்ள விமர்சனங்களையும் இரண்டாவது பாகத்தில் விரிவாக எழுதியுள்ளேன். அவரது இரண்டு பக்கங்களையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஹம்னா பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் கொழும்பில் இக்ரா புத்தக நிலையத்தில் (IQRA BOOK CENTER) வாங்க முடியும்.

2 comments

  1. I went to Islamic book house to buy this book. They don’t sell it. It can be bought from Iqra Book Centre, 79 Sri Vajiragnana Mawatha, Colombo 00900. (near the Islamic book house). Please mention their name as the seller.

  2. Is that book available in PDF form? It is difficult for us to get it from Sri Lanka specially who lives abroad. Need to read online.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *